தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் சார்பில் செய்துங்கநல்லூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் இணைந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி, ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கருங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.எஸ். பரமசிவன் மற்றும் வடக்கு ஒன்றியச் செயலாளர் லெட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தனர். கருங்குளம் ஒன்றியச் செயலாளர் க. சிவசுப்பிரமணியன் (அமமுக), பாஜக ஒன்றியத் தலைவர்கள் வி.என். சங்கர், பேச்சிமுத்து, தமமுக மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டப் பொறுப்பாளராக மாவட்ட மருத்துவர் அணிச்செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா வரவேற்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தியிருந்தும், அதை மாநில அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த நிலை தொடர்ந்தால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 125 நாட்கள் மட்டுமின்றி 150 நாட்களாக வேலை நாட்கள் அதிகரித்து அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நினைவுகூர்ந்தார். தமிழகத்தில் குடும்ப ஆதிக்க அரசியலை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நன்றியுரை செய்துங்கநல்லூர் கிளைச் செயலாளர் ஐயப்பன் வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம், மாநில எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் செங்கான், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் கதிரேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் உதயசங்கர், முன்னாள் கவுன்சிலர் பேச்சியம்மாள், இளைஞரணி செயலாளர் ராஜ் பாண்டியன், சவலாப்பேரி குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் பிரபு, முன்னாள் ஒன்றியத் தலைவர் நங்கமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.