தூத்துக்குடி தேரடிமுன்பில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்டமான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட துணைத் தலைவர் சண்முகசுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடில்லாதவர்களுக்கு வீடுகள், உஜ்வாலா திட்டம் மூலம் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்திட்டங்கள் தூத்துக்குடி நகர மக்களுக்கு நேரடியாக பயனளித்து வருவதாகவும், ஆனால் மத்திய அரசின் திட்டங்களை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகர மேயர் ஜெகன் உரிய முறையில் செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டினார். இதனால் பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் கேள்விக்குறியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட துணைத் தலைவர் சத்தியசீலன், மத்திய அரசின் நலத்திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக அல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப் படுத்தப்படுவதாக கூறினார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும், இந்த திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய பாஜக தொடர்ந்து களத்தில் இருந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் பேசுகையில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே மோடி அரசின் இலக்காக இருப்பதாக தெரிவித்தார். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வீடு, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை தூத்துக்குடி மக்களுக்கு நேரடியாக பயனளித்து வருவதாகவும் கூறினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மத்திய அரசின் நலத்திட்டங்கள் கட்சி, சாதி, மதம் பாராமல் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடுகள், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் தூத்துக்குடி மக்களுக்கு கிடைத்துள்ளதாக விளக்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் பேசுகையில், தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி, சாலை வசதி, கட்டமைப்பு மேம்பாடு, துறைமுக வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்கள் நகரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைய பாஜக தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பரமசிவம், கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல் தலைவர் லிங்க செல்வம், வடக்கு மண்டல் தலைவர் சுதா, சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அணி மற்றும் பிரிவு தலைவர்கள், துணைத் தலைவர்கள் உஷாதேவி, ஓம் பிரபு, ஜெயகுமார், சின்னதங்கம், மாரியப்பன், கிஷோர், ஞானபிரகாசம், பிதலிஸ் உள்ளிட்ட மண்டல் நிர்வாகிகள் மற்றும் பல பாஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.