தூத்துக்குடி மாவட்ட ஹெச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு, மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டர் (பயிற்சி) புவனேஸ்வராம் கலந்து கொண்டு, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை சாலை, காய்கறி மார்க்கெட், மாநகராட்சி அலுவலகம் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்றது. இதில் கலந்து கொண்டவர்கள் “100% வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் கொண்ட பலகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவின் அவசியத்தை எடுத்துரைக்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், இளைஞர் அணி செயலாளர் ஜேசுராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், இணை செயலாளர் சாதிக் பாஷா, அமைப்பாளர் பிரம்மநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக மகளிர் அணியைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிகா அஸ்வினி, நிவ்யா, விஜி, அமுதா செல்வி, ஜாணகி, வேலபுஷ்பம், சந்திராமணி, மாலதி, ராஜேஸ்வரி, பிரம்மசக்தி, மீரா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.