“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, கல்விதான் மாணவிகளின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம் என்று அமைச்சர் தெரிவித்தார்.


தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பதினொன்றாம் வகுப்பு பயிலும் 176 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சகாய ஹேமலதா ஜெயந்தி, தாளாளர் பெர்னாதெத் மேரி, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீத மாணவர்கள் கல்லூரி கல்வியில் சேர்க்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாகவும், தடையில்லா கல்வி திட்டத்தின் மூலம் இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


தமிழ்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்து வருவதாக தெரிவித்தார். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல், திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்றாலும் கல்வி அவசியம் என்றும் வலியுறுத்தினார்.


மேலும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், மாணவிகள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார். தமிழ் மொழியை பாதுகாப்பதும், நமது கலாச்சாரம் மற்றும் இனத்தை காப்பதும் அனைவரின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார். “தமிழகம்” என்று சொல்லவேண்டும், “தமிழ்நாடு” என்பதே எங்களுக்கு பெருமை என்றும் அவர் கூறினார்.


தான் எம்.ஏ., பி.எட். படித்த கால அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர், கல்வியால்தான் பல சவால்களை எதிர்கொள்ள முடிந்தது என்றும், தமிழக அரசு மாணவ மாணவிகள் முன்னேற்றம் அடைய கல்வித்துறையில் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், பள்ளியில் மாணவிகளுக்காக தயாரிக்கப்படும் சத்துணவு கூடத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.