தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 60 வார்டுகளின் 1,200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணமாக வழங்கப்பட்ட தொகையை சம்பளத்தில் முழுமையாக பிடித்துவிட்டதாக குற்றம் சாட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது உருக்கமாகப் பேசிய அவர், “தனிப்பட்ட பகையையும், அரசியல் வேறுபாட்டையும் இதிலே காட்ட வேண்டாம். எந்த குறையும் இருந்தாலும் எனக்கு சொல்லுங்கள் கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும்,”என வலியுறுத்தினார்.

மேலும், “தூய்மை பணியாளர்களை தவறாக பயன்படுத்த வேண்டாம். மாதம் ரூ.200 வரை சிலர் தொழிலாளர்களிடம் வசூலிக்கிறார்கள் என்ற புகார்கள் வந்துள்ளன — இதுபோன்ற தவறுகளை சகிக்க முடியாது. நான் இரவு 11 மணி வரை உங்களுக்காக இருக்கிறேன், ஆனால் நீங்கள் நிம்மதியாக பணி செய்ய வேண்டும்,” என்று மேயர் ஜெகன் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது சில பணியாளர்கள் “அவர் லேண்ட் நிறுவனம் எதுவும் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டியபோதும், மேயர் சமாதானமாக விளக்கி, “எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசிப் பார்த்து தீர்ப்போம்; தரையில் அமர்ந்து போராட வேண்டாம். உங்களுடைய உரிமை பறிக்கப்படாது — அதற்காக நான் உங்களுடன் இருப்பேன்,”
என்று உறுதியளித்தார்.

மேலும் அவர், “நகரம் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் நீங்கள் தான் முக்கியமானவர்கள். அரசியலுக்காக யாரும் உங்களை பயன்படுத்தக் கூடாது. உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

மேயர் ஜெகனின் உறுதியான பேச்சையும், நம்பிக்கைமிக்க அணுகுமுறையையும் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அமைதியாக போராட்டத்தை நிறுத்தி, தங்கள் பணியிடங்களுக்கு திரும்பினர். மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி மக்களிடம் சுத்தமான நகரத்தை வழங்கும் நோக்கில், நிர்வாகமும் தொழிலாளர்களும் இணைந்து பணியாற்றும் சூழலை மேயரின் தலையீடு மீண்டும் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.