தொகுதி மறுவரையறை மசோதாவை முன்னிட்டு தேவையற்ற வதந்திகளை பரப்பி மக்களை குழப்ப முயல வேண்டாம் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளுக்கு தெளிவான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதி மறுவரையறை குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனை காரணமாக காட்டி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்ப்பது ஏற்க முடியாதது,” என்று தெரிவித்தார்.
மேலும், குறிப்பாக தென் இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என குற்றம்சாட்டிய அவர், இவ்வகை வதந்திகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து விளக்கமளித்த அவர், “இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இது இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமையும்,” என்றார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த மசோதா குறித்து அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.