தூத்துக்குடியில் யாழ் மொழி பதிப்பகத்தின் சார்பில் 13 புத்தகங்கள் வெளியிடப்பட்ட சிறப்பான இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு யாழ் மொழி பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து யாழ் மொழி பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர் மேகவர்ஷினி நோக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தென்தமிழ் பேரவை ஆசிரியர் செலஸ்டின் மகிமை ராஜ், தூத்துக்குடி எழுத்தாளர் ஆ. மாரிமுத்து, தூத்துக்குடி மாவட்ட புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றத் தலைவர் மற்றும் எழுத்தாளர் திருமுருகன் (மதுரை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் 13 நூல்கள் வெளியிடப்பட்டன. “இரக்கத்தை வாழ்க்கையாக்கும்”, “இங்கே எல்லாம் அதிசயங்கள்”, “தனிமையின் நிறம்”, “அறி தெளி”, “மனசாரளம்”, “ரதி யழகி”, “அழலொளி”, “சிறைப்பட்ட சிறகுகள்”, “சிந்தனையின் தோன்றல்”, “மெய் மனம்”, “பௌர்ணமி பறவை”, “தாய்ப்பால் வாசம்” உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டு, பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியை கவிஞர் நந்தகோபால் தொகுத்து வழங்கினார். நிறைவாக செந்தமிழினி நன்றியுரை ஆற்றினார். விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. தூத்துக்குடியில் நடைபெற்ற இவ்விழா இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.