தூத்துக்குடி மறை மாவட்டத்தின் தருவைக்குளம் பங்கில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் வளாகத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட புனித நிக்குலாசியார் ஆலயம் இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புனித நிக்குலாசியாருக்கென அமைந்துள்ள ஒரே ஆலயம் தருவைக்குளத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவ்வாலயம் அப்பகுதியின் ஆன்மிக மற்றும் பாரம்பரிய அடையாளமாக விளங்குகிறது.
காலை புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய ஆலயத்திற்கு புனித சுரூபங்கள் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டன. மிக்கேல் அதிதூதர், சூசையப்பர், மாதா, சவேரியார், செபஸ்தியார், நிக்குலாசியார் மற்றும் அந்தோனியார் உள்ளிட்ட புனிதர்களின் சுரூபங்கள் பக்தி உணர்வுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்குத்தந்தை வின்சென்ட் அடிகளார் தலைமையில், உதவி பங்குத்தந்தை பவுல் அடிகளார், முன்னாள் உதவி பங்குத்தந்தை விவேக் அடிகளார், மண்ணின் மைந்தர் அருட்பணி சவரி அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரளான இறைமக்களும் பக்தியுடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.