தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல அரசு உதவிபெறும் பள்ளிகள், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விதிமுறைகளை மீறி, சிறப்புக்கட்டணம், கல்வி மேம்பாட்டு நிதி, ஆய்வகக் கட்டணம், பராமரிப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கூடுதல் தொகை வசூலித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணச் சுமையால் தினக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் கேட்டு வற்புறுத்தப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் இல்லாத சூழ்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளை மட்டுமே பொதுமக்கள் நம்பியிருப்பதால், இந்த கட்டண உயர்வு மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தும் நிலைக்கு தள்ளக்கூடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் கட்டண வசூல் தொடர்பாக தனிப்பட்ட கண்காணிப்பு குழுவை அமைத்து தணிக்கை நடத்தவும், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவின் நகல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.