தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அவர் பேசியதாவது: “ராகுல் காந்தியை பற்றி பேசுவதற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் தகுதி கிடையாது. எங்கள் தலைவர் ராகுல் காந்தி பற்றி யார் தவறாக பேசினாலும், அவர்கள்மீது கருப்பு மையை வீசும் அளவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தேவையில்லாமல் எங்களை சீண்டினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்” என்று ஆவேசமாக தெரிவித்தார்.


மேலும், திருச்செந்தூர் தொகுதியை தொடர்ந்து பலமுறை பிரதிநிதித்துவப்படுத்திய அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை நேரடியாக விமர்சித்த அவர், “ஏழாவது முறையாக தேர்தலில் நின்றும், இன்னும் திருச்செந்தூர் முருகன் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றுவேன் என்று சொல்வது வெட்கக்கேடல்லவா? கடந்த ஆறு முறை எம்.எல்.ஏ ஆக இருந்தபோது என்ன செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.


அதோடு, “திமுகவுடன் நல்ல உறவோடு இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், கூட்டணி கட்சிகளை தரக்குறைவாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தோல்வி விரக்தியில் மக்களையும், கூட்டணி நிர்வாகிகளையும் குறை கூறுவது அரசியல் நாகரிகம் அல்ல” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “இந்த முறை திமுக தோல்வியை தழுவியது இளைஞர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாததால் தான். மேடைகளில் தரக்குறைவாக பேசும் அரசியலை இன்றைய இளைஞர்கள் விரும்பவில்லை. மக்கள் மத்தியில் பந்தா காட்டும் அரசியல் இனி எடுபடாது” என தெரிவித்தார்.


மேலும், “திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தார்மீக பொறுப்பேற்று தோல்வியை ஒப்புக் கொள்வாரா? ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் கூட்டணி தோல்வியடைந்ததற்கு பதில் சொல்ல வேண்டாமா?” என்றும் சவால் விடுத்தார்.


இறுதியாக, “ராகுல் காந்தி தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும். எதிர்காலத்தில் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வருவார். திமுக இனி வெற்றியை காணாது; தோல்வி முகம் தான் காணப் போகிறது” என்று பெருமாள்சாமி கதிர்வேல் தெரிவித்தார். இந்த பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.