தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் சர்வதேச குழந்தைகள் உதவி மைய நாள் மற்றும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன் (கி.ரா.) அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி மற்றும் வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எழுத்தாளர்கள் கரிசல் அன்பழகன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமான கதைகளை கூறி, அவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு ஆக்கபூர்வமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைந்ததாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளரும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை செயலாளருமான ரவி அவர்கள் செய்திருந்தார்.