தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது: “சமூக வலைதளங்களில் கீதா ஜீவன் வெளியிட்டிருந்த பதிவை பார்த்தேன். அதில், தூத்துக்குடி மக்களுக்கு அரசியல் சிந்தனை இல்லாதது போலவும், மக்கள் தவறான முடிவு எடுத்தது போலவும் பேசப்பட்டிருந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.


இரண்டு முறை அமைச்சராக இருந்த ஒருவர், பொதுமக்களை குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஜனநாயகத்தில் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுக்கும் முழு உரிமை அவர்களுக்கே உண்டு. அந்த அடிப்படையில்தான் என்னை மக்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர்.


என் திறமை, என் பணிகள் குறித்து மதிப்பிடாமல், மக்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட தேவையான தகுதி என்னிடம் இருப்பதால்தான் அவர்கள் என்னை தேர்வு செய்துள்ளனர்.


மீண்டும் தன்னை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைத்திருந்த கீதா ஜீவனுக்கு, இந்த தேர்தல் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் மக்கள் நம்பிக்கைக்கு தகுந்த வகையில் பணியாற்றி அதை நிரூபிப்பேன். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு என் வாழ்த்துக்கள்,” என தெரிவித்துள்ளார்.