தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில், வைகாசி மாதம் 02ஆம் தேதி சனிக்கிழமையையொட்டி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


16.05.2026 அன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. தொடர்ந்து யாக பூஜைகளும் நடைபெற்றது.


இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தால் திருமணத் தடை நீங்குதல், புத்ரபாக்கியம் கிடைத்தல், மனநிம்மதி, செல்வ வளம் பெருகுதல், தீராத நோய்கள் குணமாதல், கடன் தொல்லைகள் நீங்குதல், அரசியலில் மேன்மை அடைதல், முன்னோர் சாப நிவர்த்தி, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்தல் மற்றும் முன்ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பெருகும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை, பிரத்தியங்கிரா தேவி பீடம், அய்யனடைப்பு கோரம்பள்ளம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.