2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை மறக்க முடியாத அனுபவமாகக் கொண்டு, இம்மாண்டு மழை வெள்ளம் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆலோசனையின்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்பார்வையிலும் தூத்துக்குடி மாநகராட்சி மழைநீர் மேலாண்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி திங்கட்கிழமை மாநகராட்சிக்குட்பட்ட குளங்களை நேரில் பார்வையிட முடிவு செய்து, முதலில் மீளவிட்டான் பகுதியில் உள்ள 125 ஏக்கர் பரப்பளவு கொண்ட சி.வ.குளத்தை ஆய்வு செய்தார். இக்குளம் முழுவதும் முள் செடிகள் அடர்ந்து வளர்ந்து, பொதுமக்கள் நடந்து செல்ல கூட பாதை இல்லாத அளவுக்கு காடு போல காட்சியளித்தது.
மேயர் நேரில் முள் செடிகளுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் 9 ஜேசிபி, 3 பொக்லைன் மற்றும் 2 ஹிட்டாச்சி வாகனங்கள் மூலமாக முள் அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களுக்குள் இப்பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காட்டாற்று வெள்ளத்தால் வரும் உபரி நீர் சி.வ.குளத்துக்கு சுலபமாக செல்லும் வகையில் புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் மாடன் குளம், எஸ்.வி.குளம், முள்ளிக்குளம், பண்டாரம்பட்டி குளம், மச்சாதுநகர் குளம், ஸ்டெம்பார்க் குளம், கோக்கூர் குளம் உள்ளிட்ட குளங்களும் தூர்வாரப்பட்டு, மாநகரப் பகுதியில் மழைநீர் தேக்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்,
“தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கடந்த வெள்ள அனுபவத்தை பாடமாகக் கொண்டு இம்முறை எந்த மழை வந்தாலும் மாநகர மக்கள் பாதிக்காத வகையில் முன்கூட்டியே தயாராகியுள்ளோம். 125 ஏக்கர் சி.வ.குளம் முள் செடிகள் முழுமையாக அகற்றப்பட்டதால், காட்டாற்று வெள்ளநீர் இங்கு தேங்கி நகர் பாதுகாப்பாக இருக்கும். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும், பறவைகள் நீர் அருந்தும் இயற்கை சூழல் உருவாகும்,” என தெரிவித்தார்.
பணிகள் ஆய்வின் போது, மேயர் கதிர்வேல் நகர்–மடத்தூர் வழியாக செல்லும் 40 அடி சாலை தற்போது 14 அடியாக சுருங்கி இருப்பதை கவனித்து, இருபுற முள் செடிகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அந்தச் சாலை விரைவில் சிப்காட் பைபாஸ் சாலையுடன் இணைக்கப்படும் வகையில் புதிய சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பொறியாளர் தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், வட்டச்செயலாளர்கள் ராஜன், பிரசாந்த் உள்ளிட்ட பலர் இணைந்து பங்கேற்றனர்.
மீளவிட்டான் பகுதியில் பொதுமக்கள் மாநகராட்சியின் தீவிர நடவடிக்கைகளை நேரில் கண்டு பாராட்டியதுடன், “இவ்வாறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் இம்முறை மழையில் நம்மை வெள்ளம் பாதிக்காது” என நம்பிக்கை தெரிவித்தனர்.