தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் மாதாந்திர கூட்டமும், பட்ஜெட் தாக்கல் கூட்டமும் நடைபெற்றது.


கூட்டத்தின் தொடக்கத்தில் மேயர் பட்ஜெட் தொடர்பான முக்கிய அம்சங்களை விரிவாக விளக்கினார். மாநகராட்சி துணை ஆணையர், உதவி ஆணையர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


இதற்கிடையில், திமுக கவுன்சிலர் ஒருவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மேயர், “அதற்கு எதிராக மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது” என்று தெரிவித்தார்.


இந்த பதிலுக்கு திமுக கவுன்சிலர் கடுமையாக எதிர்ப்பு பதிவு செய்து, “என் வார்டில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவது மக்களின் நலனுக்கு எதிரானது. உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். உடனே மாநகராட்சி கூட்ட அரங்கில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தி, பின்னர் வெளிநடப்பு செய்தார்.


அதனைத் தொடர்ந்து மற்றொரு திமுக கவுன்சிலர் எழுந்து, “ஏன் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது? அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்ட முயன்றார். இதனால் கூட்டத்தில்


சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனே மேயர் தலையிட்டு, “என்னை பார்த்து பேசுங்கள்; பின்னால் திரும்ப வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்ததன் மூலம் நிலைமை சற்றே அமைதியானது.


தொடர்ந்து பேசிய அதே திமுக கவுன்சிலர், “என் வார்டின் தெரு உள்ளே ஒரு டாஸ்மாக் கடை ஏற்கனவே செயல்படுகிறது. அதை அகற்ற பலமுறை முயற்சி செய்தும் இதுவரை முடியவில்லை. இதனால் என் பகுதி மிகவும் பின்தங்கி உள்ளது,” என்று தனது வேதனையை பதிவு செய்தார்.


டாஸ்மாக் கடை அமைப்பை மையப்படுத்தி நடைபெற்ற இந்த விவாதம், மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எதிர்கால கூட்டங்களில் மீண்டும் எழலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.