தூத்துக்குடி மாநகராட்சி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரப் பிள்ளை அவர்களின் திரு உருவ சிலை செல்லும் வாயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


கழிவுநீர் சரியாக வெளியேற முடியாததால் அப்பகுதியில் தேக்கம் ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாய நிலையும் உருவாகியுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக தன் சொத்துகள் அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மகத்தான தியாகியின் சிலை வளாகம் இவ்வாறு பராமரிப்பின்றி இருப்பது பொதுமக்களிடையே கவலை மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொண்டு, கழிவுநீர் வடிகால் அடைப்பை அகற்றி சுத்தம் செய்து, சுகாதாரமான சூழலை ஏற்படுத்துமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா, “தியாகி வ.உ.சி. அவர்களின் நினைவிடம் மரியாதைக்குரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் வருகை தரும் இடமாக இருப்பதால் சுகாதார வசதிகள் முறையாக செய்யப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.