தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று (26.02.2026) மாதாந்திர கூட்டமும், பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டம் தொடக்கத்தில் மேயர் பட்ஜெட் தாக்கல் குறித்து பேச தொடங்கியவுடன், மாநகராட்சி அதிமுக கொறடாவும் 51-வது வார்டு அதிமுக கவுன்சிலருமான மந்திர மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் திடீரென எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
தமிழக அரசின் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் திமுக அரசின் ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தில் புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என குற்றஞ்சாட்டி, “விடியா திமுக ஆட்சிக்கு மின் கட்டண உயர்வு பில்லே சாட்சி” என்ற பதாகையை கையில் ஏந்தியபடி கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வெளிநடப்பு செய்த அதிமுக கொறடா மந்திர மூர்த்தியை தவிர, மற்ற சில அதிமுக கவுன்சிலர்களுக்கு “நாம் எதற்காக வெளிநடப்பு செய்கிறோம்?” என்ற கேள்வியே தெளிவாக தெரியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் “நிர்பந்தத்தால் தான் வெளியே வந்தோம்” என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை விட வேடிக்கையான சம்பவம் ஒன்று கூட்டத்தில் சிரிப்பை கிளப்பியது. கூட்டத்திற்கு தாமதமாக வந்த ஒரு அதிமுக கவுன்சிலரிடம், “உங்கள் கட்சியினர் எல்லோரும் வெளிநடப்பு செய்து விட்டார்கள்” என மற்ற கவுன்சிலர்கள் தெரிவித்தனர். அதை கேட்டதும், எந்த தயக்கமும் இல்லாமல், “அப்படியா?” என்ற முகபாவனையுடன் அவரும் உடனே வெளிநடப்பு செய்தார்.
இந்த நிகழ்வு கூட்ட அரங்கில் சில நிமிடங்கள் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியது. வெளிநடப்பு செய்த அந்த கவுன்சிலரும் சிரித்தபடியே வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தின் அரசியல் சூடுக்கு நடுவே, இந்த எதிர்பாராத நகைச்சுவை தருணம் மாநகராட்சி அரங்கையே சிறிது நேரம் லேசாக்கியது என்பதே கூட்டத்தில் கலந்துகொண்டோரின் கருத்தாகும்.