தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம் தலைவர் திரு. கனகராஜ் சார்பில், சங்கத்தின் பெயருக்கும் நிர்வாகிகளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி திரு. புல்டன் ஜெசின் என்பவருக்கு வழக்கறிஞர் மூலம் சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ. கவுதம் வெளியிட்டுள்ள சட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:
பதிவு எண் 105/17 உடைய முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம், பரத குல மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது. ஏழை குடும்பங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நலிவடைந்த மக்கள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறது. இதன் மூலம் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு சமூகங்களிடையே சங்கத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நல்ல பெயர் நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 15.02.2026 அன்று சமூக வலைத்தளங்களில், 03.02.2026 தேதியிட்டதாக கூறப்படும் ஒரு கடிதம் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் சங்கத்தின் தலைமை அலுவலக லெட்டர் பேடில் தயாரிக்கப்பட்டதுபோல காட்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நபரின் சட்டமன்ற வேட்புமனுவை பரிசீலிக்குமாறு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கடிதம் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தின்றி போலியாக தயாரிக்கப்பட்டது என்றும், சங்கம் எவருக்கும் தனிப்பட்ட முறையில் அரசியல் பரிந்துரை வழங்குவதில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 20.02.2026 அன்று திரு. புல்டன் ஜெசின் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோவில், சங்கத்தின் பெயரும் தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் ராஜ், ஜான்சன் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு, அவதூறு மற்றும் மிரட்டல் நிறைந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சங்க நிர்வாகிகளின் பதவிகளை மாற்றிக் கூறி, அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், சங்கத்தின் நற்பெயருக்கும் நிர்வாகிகளின் மதிப்பிற்கும் கடும் சேதம் ஏற்பட்டதோடு, அவர்களது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல், அவமதிப்பு மற்றும் உடல் நல பாதிப்புகளுக்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த சட்ட அறிவிப்பு கிடைத்த நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையெனில் இழப்பீடு தொகையையும், அதற்கான வட்டியையும் வசூலிக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.