தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



கூட்டம் தொடங்கியதும், 51-வது வார்டு கவுன்சிலர் மந்திரமூர்த்தி, தனக்கு முன்பு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையையே மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள நிலையில், புதிய இட ஒதுக்கீட்டை ஏற்க மறுத்து, பழைய இருக்கையை வழங்கக் கோரினார்.



இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, "நீங்கள் தற்போது வேறு கட்சியில் உள்ளீர்கள். எனவே, முன்பு ஒதுக்கப்பட்ட இடத்தை மீண்டும் வழங்க முடியாது. தற்போது ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரலாம். இல்லையெனில், வெளிநடப்பு செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம்," என்று தெரிவித்தார்.



மேயரின் இந்த பதிலால் கூட்ட அரங்கில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர மறுத்த கவுன்சிலர் மந்திரமூர்த்தி, கூட்ட அரங்கிற்குள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், "நான் வெளிநடப்பு செய்கிறேன்" என்று அறிவித்த அவர், மாநகராட்சி கூட்டத்திலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.



இதையடுத்து, அந்த விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், மாநகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்றது.