தூத்துக்குடி மடத்தூர் ஆர்ச் எதிரே நடைபெற்று வரும் பைபாஸ் சாலை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் எந்த நீர் ஆதாரத்தில் இருந்து பெறப்படுகிறது? அதற்கான அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை அதிகாரிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மடத்தூர் ஆர்ச் எதிரே நடைபெற்று வரும் பைபாஸ் சாலை கட்டுமானப் பணிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், அந்த தண்ணீர் எந்த நீர் ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறது, அதற்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா, குடிநீர் விநியோக அமைப்பிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறதா அல்லது மாற்று நீர் ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எனவே, அரசு மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தை ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், சாலைப் பணிக்காக தண்ணீர் பயன்படுத்த தேவையான அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதன் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
பயன்படுத்தப்படும் நீரின் ஆதாரம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.
விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது யார் மீதும் முன்கூட்டியே குற்றச்சாட்டு சுமத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட அறிக்கை அல்ல. பொதுச் சொத்துகள், குடிநீர் வளங்கள் மற்றும் அரசின் வளங்கள் சட்டப்படி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொது நலக் கோரிக்கையாகும்.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலமும் தேவையான தகவல்கள் கோரப்பட உள்ளதாகவும், விசாரணை முடிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடாகும் என்றும் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.