முத்தையாபுரம் பகுதியில் உப்பளங்களை அகற்றி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக உப்புத் தொழிலாளர்கள், உப்பள உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டம் கவனத்திற்குரியது எனவும், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு இல்லை; உப்பளங்களை அழித்து அமைப்பதற்கே எதிர்ப்பு எனவும் தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தாங்கி நிற்கும் உப்பு உற்பத்தித் துறைக்குப் பெயர் பெற்ற பகுதியாகும். உப்பளங்கள் என்பது வெறும் தொழில் நடைபெறும் இடம் மட்டுமல்ல; பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும், மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் துறையாகவும் விளங்கி வருகிறது.
வளர்ச்சித் திட்டங்கள், தொழில் முதலீடுகள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் மாநில வளர்ச்சிக்கு அவசியமானவை. ஆனால், அந்த வளர்ச்சி ஏற்கனவே வாழ்வாதாரமாக இருக்கும் தொழில்களை அழித்து ஏற்படுத்தப்படக் கூடாது. ஒரு துறையின் வளர்ச்சிக்காக மற்றொரு துறையை பாதிக்கும் அணுகுமுறை நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியாது.
எனவே, உப்பளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தொழில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, சமூக தாக்க மதிப்பீடு மற்றும் வாழ்வாதார பாதிப்பு ஆய்வுகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்படும் மக்களுடன் நேரடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
கப்பல் கட்டும் தளத்திற்கான மாற்று இடங்களை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். உப்புத் தொழிலாளர்கள், உப்பள உரிமையாளர்கள், மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வருமான பாதுகாப்பு குறித்து அரசு தெளிவான உத்தரவாதம் வழங்க வேண்டும்.
சட்ட உரிமைகள் கழகம் தொழில் வளர்ச்சிக்கும் முதலீட்டுக்கும் எதிரான அமைப்பு அல்ல. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு. எனவே, உப்பளங்களை பாதிக்காத வகையில் மாற்று மற்றும் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து கப்பல் கட்டும் தளத் திட்டத்தை செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசையும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.