தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. பனிமயமாதா பேராலயத்திற்கு வருகை தந்தார். அவரை பேராலய பங்குத்தந்தை ஜான்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்று, பனிமயமாதா திருவுருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து பனிமயமாதாவுக்கு ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டியபதி உருவப்படத்திற்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, பாண்டியபதி பரதர் நலச்சங்க தலைவர் இன்னாசி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. பேசியதாவது: "எனக்கும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் 12 ஆண்டுகளாக நெருங்கிய உறவு உள்ளது. மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேயர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்ட வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இனி தூத்துக்குடி மக்களின் தேவைகளுக்காக கனிமொழி எம்.பி. மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமியுடன் இணைந்து நானும் முழுமையாக உதவத் தயாராக இருக்கிறேன்.
முன்பு ஒரு கை ஓசையாக இருந்தது; இனி இருகை ஓசையாக இருக்கும். கடற்கரை மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நமது பகுதிகளின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும். வலம்புரி ஜானுக்கு எம்.பி. பதவியும், 45 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கியது திமுக தான். தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் கொள்கை வழியில்தான் திராவிட இயக்கமும், திமுகவும் செயல்படுகின்றன. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியில் கனிமொழி எம்.பி.யின் பங்களிப்பு மிகப்பெரியது. ஒரு பகுதி வளர்ந்தால் அது அந்தப் பகுதியின் வளர்ச்சி; அனைத்து பகுதிகளும் வளர்ந்தால் அதுவே ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சியாகும்.
மக்களின் நலனுக்காக எப்போதும் உங்களுடன் இருப்பேன்," என்றார். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், "எனது தந்தையார் காலம் முதல் இந்த உறவு தொடர்கிறது. குரூஸ் பெர்னாந்து நினைவிடம் உலகம் முழுவதும் அறியப்படும் இடமாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எம்.ஜி.ஆர். பூங்கா அருகே மணிமண்டபத்தை அமைத்தது.
குரூஸ் பெர்னாந்து சிலையை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். படிக்கட்டு பழுதுபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப் பட்டுள்ளது. இனியும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்காக உங்களுடன் இணைந்து செயல்படுவேன்," என்றார். நிகழ்ச்சியின் நிறைவில், பாண்டியபதி பரதர் நலச்சங்கத்தின் சார்பில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு ரோஜா மாலை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாண்டியபதி பரதர் நலச்சங்க செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் ஜான், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மீனவரணி அமைப்பாளர் டேனியல், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, தெற்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோபியா, ராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் ஜூடு, திருநெல்வேலி மாநகர செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், தொழிற்சங்கத் தலைவர் அகஸ்டின், விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், பேராசிரியர் ஜெயந்திமாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.