தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு சில முக்கிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, இனிவரும் காலங்களில் பொதுவெளி மற்றும் அரசியல் மேடைகளில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி காவல் நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் கடந்த சில நாட்களாக சிறையில் இருந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் ஜாமீனில் வெளியே வருவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.