தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் நலனை முன்னிறுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60-வது வார்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கோக்கூர் குளத்தை சீரமைத்து அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபாதைக் கற்கள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளின் தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும், செல்வீஜர் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் நோக்கில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைப்புப் பணிகளையும் பார்வையிட்டு, பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், “மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் சமமான நலன் கிடைக்கும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம். பணிகள் நடைபெறும் இடங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, தரத்தில் எந்தவித குறையும் ஏற்படாதவாறு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர். அவற்றையும் கவனத்தில் கொண்டு தேவையான மாற்றங்கள் செய்து, மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. மக்களுக்கான திட்டங்களும், அதன் செயல்பாடுகளும் முழுமையான பயனை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்” என்றார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, முத்துவேல், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.