தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தனது தந்தையார் என். பெரியசாமி, தன்னையும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனையும் குறித்து அரசியல் நாகரிகமின்றி அவதூறாகவும் பொய்யான தகவல்களையும் பேசியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த மழை மற்றும் வெள்ளப் பாதிப்பு காலத்தில் தூத்துக்குடியில் யாரும் களத்தில் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது என்றும், அப்போது தாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அன்றைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதை தூத்துக்குடி மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பிப் பார்க்காமல் சென்றவர்கள், தூத்துக்குடி குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் திமுகவினர் வசூல் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அதை நிரூபிக்க முடியாவிட்டால் திமுகவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், "அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிட வேண்டும். பல கட்சிகள் மாறிய பச்சோந்தியான நிர்மல்குமார், இனியாவது கண்ணியமாக அரசியல் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தனது கண்டன அறிக்கையில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.