தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து, உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 93 ஆண்டுகளாக சிறிய அளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பைத் தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சப்-கலெக்டர் பிரபு தரப்பில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் சுபாஷ் பண்ணையார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது பேசிய சுபாஷ் பண்ணையார், "உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்தப் பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரம் உப்பளத் தொழிலும், மீன்பிடித் தொழிலும் தான். ஏற்கனவே பனைத் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாரம்பரிய உப்பளத் தொழிலையும் அழிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு தீர்வு காண வேண்டியது அதிகாரிகள் அல்ல; தமிழக அரசுதான். உப்பள உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க தீவிர போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தூத்துக்குடி மாவட்டம் அமைதியாக இருக்காது. எனவே அரசே மக்களை போராட்டத்திற்கு தள்ளாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்திக்க முடியவில்லை. எனவே தமிழக அரசு நேரடியாக தலையிட்டு இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். தற்போதைய நிலை நீடித்தால் அடுத்த கட்டமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.
போராட்டத்தில் உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், முருகேசன், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ. பால், பிரபாகர், தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்ராஜ், பரமசிவன், பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் முத்தையாபுரம், முள்ளக்காடு, பொட்டல்காடு, புல்லாவழி, எம். சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று, "பாரம்பரிய உப்பளத் தொழிலை காப்போம்", "மீன்பிடித் தொழிலை பாதுகாப்போம்", "இயற்கை வளங்களை அழிக்காதே" என முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.