தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக வெற்றிக்கழகத்தின் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார்.



இதில் எரிசக்தித் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் சிறப்புரையாற்றினார். இந்நிலையில், இந்த அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் சில உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



பொதுவாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மின்வாரியத்தின் செயற்பொறியாளர் (Executive Engineer) டவுன் மற்றும் ரூரல் பிரிவு அதிகாரிகள் அரசு ஒதுக்கிய வாகனத்தில் நிகழ்விடத்தில் இருந்ததாகவும், சில அதிகாரிகள் மேடையின் முன்பகுதியில் நின்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.



இதுவரை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்திலும் மின்வாரிய உயர் அதிகாரிகள் இவ்வாறு பங்கேற்றதாக தெரியாத நிலையில், இந்த நிகழ்வில் அவர்கள் இருந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வெளியாகாத நிலையில், அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தற்போது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.