தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த வெள்ளப் பாதிப்பின்போது மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மக்களை சந்திக்காமல் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.



இதற்கு பதிலளித்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், அமைச்சர் நிர்மல்குமார் தூத்துக்குடி மாநகராட்சியின் வரலாறும், வளர்ச்சியும் அறியாமல் கருத்து தெரிவிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மாநகராட்சியில் எத்தனை தெருக்கள், எத்தனை குறுக்கு சாலைகள் உள்ளன என்பது கூட தெரியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் குறித்து பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை என அவர் கூறியுள்ளார்.



கடந்த பெருவெள்ளத்தின் போது அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு 15 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை முன்னெடுத் ததாகவும், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.



2021-க்கு முன்பாக அதிமுக ஆட்சிக் காலங்களில் சாதாரண மழைக்கே மக்கள் பல மாதங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்ததாகவும், ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட பெருவெள்ளின் பாதிப்புகள்கூட ஒரு மாதத்திற்குள் பெருமளவில் சீரமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் 4,000 சாலைகள் அமைக்கப்பட்டதுடன், 53 புதிய பூங்காக்கள், பெண்களுக்கென மூன்று மகளிர் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்ட படிப்பகத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வங்கிப் பணிகள் உள்ளிட்ட அரசுப் பணிகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.



அதேபோல், ஏழு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டதால் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தற்போது மாநகரில் 24 மணி நேர குடிநீர் வழங்கப்படும் நிலை உருவாக்கப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அமைச்சர் நிர்மல்குமார், பிறரிடம் கேட்டு பெற்ற தவறான தகவல்களை பொதுமக்களிடம் கூறுவதற்கு பதிலாக, முதலில் மாநகராட்சி முழுவதும் நேரில் சுற்றிப்பார்த்து மக்களிடம் உண்மையான நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் மேயர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மின்துறையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதையும், ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப் படாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.



தெர்மல் நகர் அனல் மின் நிலையத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கழிவுச் சாம்பல் கடலில் கலப்பதால் மீன்வளம் மற்றும் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாகவும், இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அமைச்சரின் முதல் கடமை என்றும் தெரிவித்துள்ளார். இறுதியாக, தனது தந்தைக்கு "முரட்டு பக்தன்" என்ற பட்டம் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால், கட்சிக்காக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக வழங்கப்பட்டதாகவும், பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு வந்தவர்களுக்கு அந்த வரலாறு தெரியாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தனது கண்டன அறிக்கையில் பதிலடி அளித்துள்ளார்.