தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேம்பார் பவுல் நகர் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் இன்று (07.04.2025) ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்ததாவது :-

வேம்பார் பவுல் நகரில் எங்கள் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்குரிய பாதையை நாங்கள் மட்டுமே பயன்படுத்தவும், முத்தரையர் சமுதாய மக்கள் பயன்படுத்தும் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் கடந்த (06.03.2025) அன்றும் (27.3.2025) அன்றும் விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் எங்கள் ஆதிதிராவிடர் சமுதாய பொதுமக்கள் சார்பாக மனு அளித்தோம். மேலும் (29.3.2025) கிராம சபைக் கூட்டத்திலும் மனு அளித்தோம்.  

எங்கள் மனுவின் பேரில் மேற்படி தெருக்கள் இரண்டையும் வட்டாட்சியர் அவர்களும், வட்ட நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் பார்வையிட்டதில், முத்தரையர் தெருவில் ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.  


அத்தோடு ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் ஆக்கிரமிப்பை அகற்ற நேரில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்து வருகின்றனர்.  


மேலும் வரும் 2025 ஜூன் மாதம் முத்தரையர் சமுதாய மக்களின் கோவில் கொடைவிழா நடைபெற இருக்கிறது. இந்த கொடை விழாவின் போது முத்தரையர் சமுதாய மக்கள் ஒன்று கூடுவார்கள்.  

இதனால் இரண்டு சமுதாய மக்களுக்கும் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக முத்தரையர் சமுதாய தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றித் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் கோவில் கொடைவிழா நடைபெறுவதற்கு முன்பு மேற்சொன்ன ஆக்கிரமிப்பு அகற்றப்படாவிட்டாலோ, காலதாமதம் செய்யப்பட்டாலோ இரண்டு சமுதாய மக்களுக்கும் பிரச்சனை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகக்கூடிய சூழ்நிலை உருவாகும்.  

ஆகவே இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து இரண்டு சமுதாய மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.