தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனம்–செஞ்சி சாலை, கொள்ளார் கிராமம் சிப்காட் வளாகத்தில் நடைபெற்றது.


இந்த விழாவில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பயன்கள் குறித்து விளக்கப்பட்டதுடன், 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கப்பட்டன. மேலும், இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் (ஐ.ஏ.எஸ்.) தலைமையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பயனாளிகள் இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாரம் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு வளையல் அணிவித்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளைகாப்பு உணவும் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பங்கேற்ற முந்தைய ஆண்டு சமுதாய வளைகாப்பு விழாவில் பயன் பெற்ற பெண்கள், தமிழக அரசு கர்ப்பிணி பெண்களை சிறப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தனர். கர்ப்பகாலத்தில் அரசு வழங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை முறையாக பயன்படுத்தியதன் காரணமாக, தாங்களும் தங்களின் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.


தமிழக அரசுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கும், துறை சார்ந்த அலுவலர்களுக்கும் தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.