சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., தலைமையில் இன்று (03.02.2026) காலை 11.00 மணியளவில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு மொத்தம் 1056 மடிக்கணினிகளை வழங்கினார்.


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டு கேட் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மாநாட்டு மையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மடிக்கணினிகளை பெற்ற மாணாக்கர்களை அமைச்சர் வாழ்த்திப் பேசினார். கல்வி வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது என்றும், மாணவர்கள் இந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும், “உலகம் உங்கள் கையில்” திட்டம் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும் என்றும் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் திரளாக கலந்து கொண்டு, மடிக்கணினிகளை பெற்றுக்கொண்டனர்.