தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), 2025–26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3) வலுவான நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயர் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். கூட்டத்தில் Executive Director, தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மூன்றாம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 14% உயர்ந்து, கடந்த ஆண்டின் ₹300 கோடியிலிருந்து ₹342 கோடியாக அதிகரித்துள்ளது. செயல்பாட்டு லாபம் ₹408 கோடியிலிருந்து ₹458 கோடியாக உயர்ந்து 15% வளர்ச்சி கண்டுள்ளது. நிகர வட்டி வருமானம் ₹646.14 கோடியாக உயர்ந்து, 13.28% வளர்ச்சி பெற்றுள்ளது.
மொத்த வணிகம் 14.28% வளர்ச்சியுடன் ₹1,07,470 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வைப்பு தொகை 12.53% அதிகரித்து ₹56,707 கோடி ஆகவும், CASA வைப்பு 14.94% உயர்ந்து ₹15,847 கோடி ஆகவும் உள்ளது. மொத்த கடன் வழங்கல் 16.30% வளர்ச்சியுடன் ₹50,763 கோடி என பதிவாகியுள்ளது. வங்கியின் சொத்து தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்த NPA 1.32% இலிருந்து 0.91% ஆகவும், நிகர NPA 0.41% இலிருந்து 0.20% ஆகவும் குறைந்துள்ளது. மூலதன போதுமான விகிதமான CRAR 30.08% ஆக உள்ளது.
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த AI அடிப்படையிலான அழைப்பு மையம், LOS & LMS அமலாக்கம், Workflow Automation, வீடியோ KYC, இணைய வங்கி பாதுகாப்பு மேம்பாடுகள், EPF ஆன்லைன் செலுத்துதல் வசதி உள்ளிட்ட டிஜிட்டல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த காலாண்டில் 12 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. MSME, சில்லரை மற்றும் விவசாய கடன் பிரிவுகள் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும், டிஜிட்டல் மாற்றம் மூலம் எதிர்கால வளர்ச்சி மேலும் வலுப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்தது.