தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு பல மனுக்களுக்கு உடனடி தீர்வாணைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி முகாமைத் தொடங்கி வைத்து பேசினார்.
மழைநீர் வடிகால் ஏற்பாடுகள் முழு வேகத்தில்
தூத்துக்குடி மாநகரில் உள்ள 60 வார்டுகளில் மூன்றில் மட்டும் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த வார்டுகளில் தற்காலிக மழைநீர் ஓட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் தெரிவித்தார். “10 செ.மீ. மழை பெய்ந்தாலும் இரண்டு மணி நேரத்தில் நீர் தேங்காமல் செல்ல 14 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, மழைக்கால அச்சம் இனி தேவையில்லை” என்றார்.
சாலை மற்றும் பூங்கா மேம்பாட்டில் சாதனை
நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை 4500க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 3 பூங்காக்கள் மட்டுமே இருந்த நிலையிலிருந்து இன்று 53 பூங்காக்கள் வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என கூறினார்.
விளையாட்டு வசதிகளில் புதிய முன்னேற்றங்கள்
முத்துநகர் கடற்கரையில் திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்துக்கு தொடர்ந்து, ஜோதி நகர்—ரஹமத் நகர் அருகில் புதிய ஸ்கேட்டிங் மைதானமும், தூத்துக்குடியில் தனிக்கட்டமாக வில்வித்தை பயிற்சி மைதானமும் அமைக்கப்படும் என அறிவித்தார்.
பேவர் பிளாக் சாலைகள்:
பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் வியாபாரிகளின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு சாலைகளில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதிகளில் இருவழிப் பார்க்கிங் காரணமாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய மேயர், “சாலையில் நடப்போருக்கும் வாகன நிறுத்தத்துக்கும் தனி பகுதிகளைப் பயன்படுத்துங்கள்” என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
‘கருத்துகளம்’ திட்டம் அறிமுகம்
பொதுமக்களின் நேரடி கருத்துகளை சேகரித்து நகர வளர்ச்சியில் செயல்படுத்தும் நோக்கில் புதிய ‘கருத்துகளம்’ திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேயர், ஆணையர் அல்லது மாநகராட்சி கால் சென்டரை யாரும் நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், ஆக்கபூர்வமான யோசனைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.