தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி பாலியல் சீண்டல் சம்பவம் இடம்பெற்றது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியர் தியாகராஜன் ஹென்றியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எபநேசர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

சமீப மாதங்களில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீது பாலியல் சீண்டல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது சமூகத்தையே அச்சுறுத்தும் நிலைமைக்கு தள்ளி விட்டதாக அவர் குறிப்பிடுகிறார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஆசிரியரே மாணவியை சீண்டியிருப்பது “வேலியை பயிர் மேய்வது” போன்றது என அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்காக அரசு பல சட்டங்களை நிறைவேற்றியதாகக் கூறினாலும், பள்ளி மாணவிகள்மீது நடைபெறும் வன்கொடுமை தொடர்கதையாக மாறியுள்ளது. இதை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், இத்தகைய குற்றவாளிகள் மீது மிகவும் கடுமையான தண்டனைகள் அமல்படுத்தப்படும் என்றும், பெண்கள் மற்றும் மாணவிகள் சுதந்திரமாக, பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கப்படும் என்றும் எபநேசர் தெரிவித்தார்.

“புத்தர் பிறந்த புனித நிலமும், காந்தி வாழ்ந்த கருணை மண்ணும், பாரதியார், வீரன் சுந்தரலிங்கம், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் போன்ற மகான்கள் வளர்த்த தூய தமிழ்நாட்டிலும் இப்படியான அருவருப்பான சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது,” என அவர் கண்டனம் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் தியாகராஜன் ஹென்றியை உடனடியாக கைது செய்யாவிடில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என எபநேசர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.