தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் முழு விழிப்புடன் செயல்பட வேண்டுமென சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தீவிர திருத்தச் செயல்பாடுகளில், வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவது குறித்து பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக 2002ம் ஆண்டு பதிவான பழைய வாக்காளர் விவரங்களைத் தேடுவதில் சிரமம் அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் கூடுதல் பொறுப்புகளைச்  சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் கணக்கீட்டு படிவங்களை மிகுந்த கவனத்துடன் நிரப்பி வரும் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் வழங்க வேண்டும். படிவங்களை வழங்கும் போது நிரப்பிய இரண்டு பிரதிகளில் ஒன்றை அத்தாட்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவூட்டியுள்ளார்.

மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஒவ்வொருவரும் சரிபார்க்க வேண்டும். பெயர் இடம்பெறாதிருந்தால் உடனடியாக மீண்டும் சேர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தன்னார்வலர்களின் உதவியுடன் வாக்காளர் பிரச்சினைகள் தீர்க்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்களது வாக்காளர் விவரங்களைச் சரிபார்க்க பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.