தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.சகாயராஜ், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிரே உள்ள திருமண மண்டபத்தில் அவரது பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.


புதிய மாவட்ட தலைவரை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எஸ்.எம்.சகாயராஜுக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பதவியேற்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.எம்.சகாயராஜ் பேசுகையில், “தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதில் முழு கவனம் செலுத்துவேன். திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பேன். தூத்துக்குடி மாநகரத்தை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன் பாடுபடுவேன்,” என்றார்.


விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.


இதனைத் தொடர்ந்து, எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் முதல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர்கள் மேற்கு – செந்தூர்பாண்டி, வடக்கு – சேகர், கிழக்கு – ஐசன் செல்வா, தெற்கு – ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி சிறப்புரையாற்றினர்.


கூட்டத்தில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தர காங்கிரஸ் காரியக் கமிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சியில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் விதிக்கப்படும் வரி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், மாநகராட்சியின் பல கட்டிடங்கள் அதிக டெபாசிட் மற்றும் வாடகை காரணமாக காலியாக உள்ளதால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய வேண்டும், உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பள அதிபர்களை பாதிக்காத வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்க வேண்டும் என உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் காங்கிரஸ் துணை அமைப்பு தலைவர்கள் இளைஞர் காங்கிரஸ் மரியஆல்வின், மாணவர் காங்கிரஸ் பிளசி, மகளிர் காங்கிரஸ் ப்ரீத்தி வினோத், எஸ்சி துறை பிரபாகரன், ஊடகப் பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், அமைப்புசாரா பிரிவு தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மீனவர் பிரிவு தலைவர் மிக்கேல், விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன் உள்ளிட்டோர் பேசினர்.


மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன் அனைவரையும் வரவேற்றார். மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், மகளிர், இளைஞர், மாணவர், சிறுபான்மை மற்றும் தொழிலாளர் பிரிவு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம் நன்றிவுரை கூறினார்.