திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்கேற்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371ஆம் ஆண்டு நினைவை ஒட்டி, சண்முகர் ஆண்டு விழா ஜனவரி 31ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு மேல், சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலா வந்து திருக்கோயில் சேருகிறார்.
தைப்பூச தினமான பிப்ரவரி 1ஆம் தேதி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்திற்கு புறப்படுகிறார்.
மாலை 5 மணிக்கு, தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சேருகிறார். தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.