தெற்கு மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் இந்த முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் பொதுமக்கள் அதிகம் சந்திக்கும் முக்கியமான ஐந்து குறைகள் குறித்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதில் சொத்து வரி தொடர்பான பிரச்சனைகள், குடிநீர் விநியோக குறைகள், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள் மற்றும் பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் ஆகியவை முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.


முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 4,000 சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன என்றும், முக்கிய சாலைகளில் அகலம் அதிகரிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக சில பகுதிகளில் 5.5 மீட்டர் அகலமாக இருந்த சாலைகள் தற்போது 9 மீட்டர் வரை விரிவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


மேலும் புதிய சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், திருச்செந்தூர் செல்லும் முக்கிய வழித்தடங்களில் தெருவிளக்குகள் பழுது நீக்கப்பட்டு, தேவையான இடங்களில் புதிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகள் பாதுகாப்பாகவும் ஒளிவளத்துடனும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.


மாநகராட்சி சேவைகள் வீடு தேடி வரும் திட்டத்தின் மூலம் பெயர் மாற்றம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட சேவைகள் விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது சில வார்டுகளில் தினமும் 10 மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் 24/7 குடிநீர் விநியோகத்திற்கு மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


கூட்டத்தில் துணை ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.