தூத்துக்குடி, நவம்பர் 10:
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஐந்து தமிழக தொழிலாளர்கள் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பி. பொன்னுதுரை (41), எஸ். புதியவன் (52), எம். பேச்சிமுத்து (42) ஆகியோரும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா (36), தளபதி சுரேஷ் (26) ஆகியோரும் ஆவர். இவர்கள் மாலி மின்மயமாக்கல் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது சமூக வலைத்தளப் பதிவில் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

அதில், “மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த ஐந்து தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அவர்களை மீட்டு இந்தியாவிற்கு திரும்பச் செய்யும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், கடத்தப்பட்ட தொழிலாளர்கள் நலமுடன் உள்ளார்களா என்பதை உறுதிசெய்ய இந்திய தூதரகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.