கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று மாலை கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தலைமையில் கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்வு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுகவில் இணைந்த அனைவருக்கும் அமைச்சர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி தொகுதியில் நல்ல தலைமை பண்பும், மக்கள் ஆதரவும் கொண்ட மாணிக்கராஜா திமுகவில் இணைந்திருப்பது கட்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும், இதன் மூலம் கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில், கோவில்பட்டி தொகுதியின் தேர்தல் வரலாறை நினைவுகூரும் அரசியல் விமர்சகர்கள், நிலைமை அவ்வளவு எளிதானதாக இருக்காது எனக் கூறுகின்றனர். கடந்த தேர்தலில் இந்த தொகுதி மாநில அளவில் கவனம் பெற்ற நட்சத்திர தொகுதியாக மாறியது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 26 வேட்பாளர்கள் களமிறங்கிய நிலையில், கடம்பூர் ராஜு மற்றும் டி.டி.வி. தினகரன் இடையே ஏற்பட்ட நேரடி போட்டி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் கடம்பூர் ராஜு 68,556 வாக்குகள் பெற்று, 56,153 வாக்குகள் பெற்ற டி.டி.வி. தினகரனை 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றி, கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவின் வாக்கு வங்கி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு இன்னும் வலுவாக இருப்பதை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் கோவில்பட்டி, தீப்பெட்டி தொழில், கடலைமிட்டாய் உற்பத்தி, பட்டாசு, ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களால் தனித்த அடையாளம் பெற்ற பகுதியாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள கடம்பூர் ராஜு, கோவில்பட்டி அரசியலில் தவிர்க்க முடியாத முகமாக இருந்து வருகிறார்.
இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை மீண்டும் கடம்பூர் ராஜுவுக்கு கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் பட்சத்தில், திமுகவுக்கு இந்த தொகுதியில் வெற்றி பெறுவது எளிதான காரியமல்ல என்றும், கடம்பூர் ராஜுவின் செல்வாக்கே இன்னும் கோவில்பட்டி அரசியலில் முக்கிய காரணியாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமைச்சரின் “வெற்றி உறுதி” என்ற நம்பிக்கை பேச்சு ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கடம்பூர் ராஜுவின் தொடர்ச்சியான வெற்றிப் பின்னணி மற்றும் உள்ளூர் அரசியல் பிடிப்பு, கோவில்பட்டி தொகுதியை வரும் தேர்தலிலும் கடும் போட்டிக்குரிய தொகுதியாக மாற்றியுள்ளது.