தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அன்று காலை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை குளத்தூர் ஊராட்சி செயலாளர் நடத்தினார்.


கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி முன்வைத்த கோரிக்கையின்பேரில், குளத்தூர் பச்சையாபுரம் ஊரணி சாலையில் பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சாலை, கொல்லம் பரம்பு பகுதியில் செயல்படும் கே.கே.எம் கல் குவாரி நிறுவனத்திற்கு சொந்தமான கனரக வாகனங்கள் மூலம் சுமார் 20 டன் அளவில் கல், மணல், ஜல்லி ஏற்றி செல்வதால், முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, இனி அந்த சாலையில் கல் குவாரி வாகனங்கள் செல்லக் கூடாது என்றும், விதிமீறி கல், மணல், ஜல்லி ஏற்றி வரும் வாகனங்கள் மீது குளத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும், குளத்தூர் அண்ணாநகர் காலணியில் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா மற்றும் காலணி வீடுகளை, அரசு விதிகளுக்கு மாறாக மாற்று சமூகத்தினருக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற விதி இருப்பதை சுட்டிக்காட்டி, அந்த விதியை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அருந்தியர் மக்களுக்கு வழங்கப்பட்ட காலணி வீடும், அரசு வழங்கிய 5 சென்ட் வீட்டு மனை பட்டாவையும் கிரயமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இதனை ரத்து செய்ய வேண்டி, அந்த கிரயம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானமும் இன்றைய கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குடியரசு தினத்தன்று நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டம், கிராம சாலைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நீதியை வலியுறுத்தும் வகையில் முக்கிய முடிவுகளை எடுத்ததாக பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளது.