அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும், கயத்தார் யூனியன் முன்னாள் சேர்மனுமான கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட நிலையில், அவரை தொடர்ந்து கோவில்பட்டி, தூத்துக்குடி பகுதிகளைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்வு இன்று மாலை தூத்துக்குடி கீதா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது. புதிதாக இணைந்த அனைவருக்கும் அமைச்சர் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் நினைவுச் சின்னமாக குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா,
“நான் எந்த கட்சியில் இருந்தாலும் என்னை குடும்ப நண்பராகவே பார்த்தவர் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என். பெரியசாமி. அவர் மறைவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, ‘என் மகள் கீதா ஜீவனை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று என்னிடம் கூறிய அந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் நிற்கின்றன.
அன்றிலிருந்து இன்று வரை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை நான் என் சகோதரியாகத்தான் பார்த்து வருகிறேன். நான் குடும்ப பிரச்சனையால் மனமுடைந்து நின்றபோது, முதன்முதலில் எனக்கு ஆறுதல் கூறியவர் பெரியசாமி அவர்கள் தான்.
நான் கயத்தார் யூனியன் சேர்மனாக இருந்தபோது, அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த காலத்தில் எந்த வேறுபாடும் இல்லாமல் வளர்ச்சி பணிகளுக்காக அதிக நிதி வழங்கினார். நான் மாற்றுக் கட்சியில் இருந்தாலும், அவர்மீது என்றும் மரியாதை குறையவில்லை.
எந்த நிபந்தனையும் இன்றி, சாதி–மத பேதமின்றி தமிழகத்தில் நல்லாட்சியை வழங்கி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன். கோவில்பட்டி தொகுதியில் கழகம் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அவர்களை முழுமனதுடன் வெற்றி பெறச் செய்வோம்” என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “அண்ணன் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா நல்ல தலைமை பண்பும், மக்கள் மீது அக்கறையும் கொண்டவர். அவர் அமமுகவை விட்டு திமுகவில் இணைந்திருப்பது, கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டதற்கான அறிகுறி” என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.