வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் R. சித்ராங்கன், மகளிர் அணி மாநில பொது செயலாளர் தலைமையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இந்த குழுக்கள் தங்களது தொகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தேர்தல் அறிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.


இதன்படி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்டத் தலைவர் D. சின்னதங்கம், வடக்கு மண்டல் தலைவர் K. சுதா, திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் J. சாமிநாதன், சாத்தான்குளம் மண்டல் தலைவர் K. சரவணன், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் S. திருநாகரன், மாவட்டத் துணைத் தலைவர் S. சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டங்கள் அடங்கிய வகையிலும் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என மாவட்ட தலைவர் R. சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.