தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க. சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்தல் களத்தில் உள்ளார்.


2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர், பின்னர் பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.வில் இணைந்தார். 2009ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, அதன் பின்னரும் தொடர்ந்து மக்கள் ஆதரவை பெற்று தற்போது அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.


இந்த நிலையில், பரமன்குறிச்சியில் நேற்று திறந்த ஜீப்பில் நின்றபடி உற்சாகமாக பிரசாரம் செய்த அமைச்சர், மக்கள் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென, “முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வர, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்” என தவறாக கூறியதும் அங்கு இருந்தோர் சில நொடிகள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.


உடனே அருகில் இருந்த நிர்வாகிகள் தவறை சுட்டிக்காட்ட, சற்றே சங்கடத்துடன் சிரித்த அமைச்சர், “உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்” என திருத்திக் கொண்டார். பின்னர் சூழ்நிலையை சமாளிக்க விரைவாக பிரசாரத்தை முடித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஒரு சிறிய ‘சின்ன’ தவறு… ஆனால் அரசியல் மேடையில் பெரிய பேச்சாக மாறிய இந்த சம்பவம், அப்பகுதியில் சிரிப்பையும், சமூக வலைதளங்களில் வைரலாகும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது!