கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண்மருத்துவமனை, தனது புதிய கிளையை தூத்துக்குடியில் துவங்கியுள்ளது. உலகத் தரமான கண் சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல கிளைகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியிலும் புதிய மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜெயராஜ் சாலையில் சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், அதிநவீன அறுவைசிகிச்சை அறை, பரிசோதனை அறைகள், ஆப்டோமெட்ரி பிரிவுகள், கண்கண்ணாடி சேவை, மருந்தகம், நோயாளிகள் தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை திறப்பு விழாவில் தூத்துக்குடி ஆயர் டாக்டர் ஏ. ஸ்டீபன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பி. விநாயகமூர்த்தி, பி. முருகானந்தம், டாக்டர் ஆர். சரவணன், டாக்டர் எஸ். சிவசைலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவமனையில் லேசர் கண்புரை அறுவைசிகிச்சை, லாசிக் பார்வை திருத்தம், விட்ரெக்டமி, குளுகோமா சிகிச்சை, மாறுகண் சிகிச்சை, குழந்தைகள் கண் மருத்துவம், கருவிழி மாற்று சிகிச்சை, கண் நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு ஆரம்ப சலுகையாக இரண்டு மாதங்களுக்கு இலவச முழு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன் நிறுவனம் தற்போது 28 கிளைகள் மூலம் சேவை வழங்கி வருகிறது. NABH தரநிலைகளை பின்பற்றி செயல்படும் இந்நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. மேலும், தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து கிளைகளும் இணைக்கப்பட்டுள்ளதால், நோயாளிகளின் மருத்துவ தகவல்களை எந்த கிளையிலிருந்தும் மருத்துவர்கள் அணுகி சிகிச்சை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.