தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல்வாழ்வு கட்சியின் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் மு. பிரசன்னகுமார், கப்பல் சின்னத்திற்கு ஆதரவு கோரி ஸ்பிக்நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கர்ம வீரர் காமராஜர் தொண்டர்கள் மற்றும் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் ஆதரவு பெற்ற அவர், பொதுமக்களை சந்தித்து கப்பல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், 24 வாக்குறுதிகள் அடங்கிய துண்டறிக்கைகளையும் மக்களிடம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசிய போது, ஆலங்குளம் பகுதியில் நடந்ததாக கூறப்படும் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக கண்டித்தார். பனை விவசாயி மணிகண்டன் என்ற இளைஞரை பணம் கடத்தியதாக கூறி போலீசார் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, இரு கால்களிலும் சுட்டதாக குற்றம் சாட்டினார். “தேர்தல் காலத்தில் காவல்துறை தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இத்தகைய சம்பவத்திற்கு தேர்தல் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பிய அவர், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. இசக்கி ராஜாவை இடைநீக்கம் செய்தது கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே என்றும் விமர்சித்தார்.
மேலும், “அவரை உடனடியாக பணிநீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையெனில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்குள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க தயார்” என எச்சரிக்கை விடுத்தார். இந்த பரப்புரையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.