இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமாக விளங்கும் பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 15-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (07.02.2026) சனிக்கிழமை, விஸ்வாவசு வருஷம், தை மாதம் 24-ஆம் தேதி, சித்திரை நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவை முன்னிட்டு காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை கும்ப லக்னத்தில் வருஷாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. விழாவில் விக்னேஸ்வர பூஜை, விநாயகர் அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, புண்யாஹவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், விமான அபிஷேகம், வருஷாபிஷேக அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் முறையாக நடைபெற்றன.


விழாவில் பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு வீரசக்கதேவியை தரிசித்து திருவருளையும் அருட்பிரசாதத்தையும் பெற்றனர். பக்தர்களின் வசதிக்காக விழாவை முன்னிட்டு அன்னதானமும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த 15-வது ஆண்டு வருஷாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு, பாஞ்சாலங்குறிச்சி சிறப்பாக செய்து வந்தது. விழா ஏற்பாடுகளில் ஆலயக் குழு செயலாளர் M. ஆதிசங்கர், பொருளாளர் P. வரதராஜப் பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய பங்காற்றினர். விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பக்தர்களுக்கும் ஆலயக் குழு சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.