தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், பிரதமர் ஜன விகாஸ் காரியகிரம் (PMJVK) திட்டத்தின் கீழ் ரூ.136.35 கோடி செலவில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கீரண் ரிஜிஜுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன், மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2021–2022 நிதியாண்டில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் PMJVK திட்டத்தின் கீழ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏழு மாடிகள் மற்றும் 687 படுக்கைகள் கொண்ட, மிக உயர்தர சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், கடந்த 23.10.2025 அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசாணை (G.O. Ms. No.452) மூலம், அந்த மருத்துவமனை “மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமனையாக” மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது, PMJVK திட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.


பல்துறை உயர் தொழில்நுட்ப மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, ஒரே துறைக்கான மருத்துவமனையாக மாற்றுவதால், தூத்துக்குடி மாவட்ட மக்கள் மேம்பட்ட மருத்துவ வசதிகளை இழக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே, தமிழக அரசின் மேற்கண்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்து, அந்த மருத்துவமனை தனது முதன்மை நோக்கமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக திறக்கப்பட்டு செயல்பட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டு, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும், பிரதமர் அவர்களின் கவனத்திற்கும் இக்கோரிக்கை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.