கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில், கடந்த 30.09.2018 அன்று 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பின் சம்பந்தப்பட்ட எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, சம்பந்தப்பட்ட எதிரிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.


அதன்படி, கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் செயல்பட்ட தனிப்படை போலீசார், வழக்கு தொடர்பான சாட்சியங்களை தொடர்ந்து சேகரித்ததுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இந்த விசாரணையில், மேற்படி கொலை சம்பவத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த டேவிட் ராஜ் மற்றும் சம்பவ நேரத்தில் இளஞ்சிறாராக இருந்த மற்றொரு நபர் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.


8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த கொலை வழக்கில் எதிரிகளை கைது செய்து, வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த காவல் துணை கண்காணிப்பாளர், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட காவல்துறையினரின் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.