தேசிய கல்விக் கொள்கை குறித்து உண்மைகளை திரித்து பேசுவதன் மூலம் மக்களை குழப்பும் முயற்சியில் திமுக எம்.பி. கனிமொழி ஈடுபட்டு வருவதாக, பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தேசிய கல்விக் கொள்கையின் பெயரில், ஹிந்தியை ஏற்றுக் கொண்டால்தான் மத்திய அரசு நிதி வழங்கும் என கனிமொழி கூறுவது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் என்றும், இது அரசியல் லாபத்திற்காக செய்யப்படும் பொய்ப் பிரசாரமெனவும் அவர் தெரிவித்தார்.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கல்விக் கொள்கை – 2020 எந்த மொழியையும் கட்டாயப்படுத்துவதில்லை என்றும், மாநிலங்களுக்கு மொழி மற்றும் கல்வி தொடர்பான முடிவுகளில் முழு சுதந்திரம் வழங்கும் கொள்கைதான் எனவும் சித்ராங்கதன் விளக்கினார்.


மாணவர்களுக்கு தாய்மொழியில் கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, புதுமை மற்றும் உலக தரத்துக்கு இணையான கல்வி வழங்குவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்றும், ஹிந்தி திணிப்பு என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.


மூன்று மொழிக் கொள்கை மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்றும், தமிழ்நாடு தொடர்ந்து இரண்டு மொழிக் கொள்கையை பின்பற்றி வருவதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டே வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நிதி வழங்குவதற்கும் மொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புதிய பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இ-கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி வழங்கியிருப்பதை நினைவூட்டிய சித்ராங்கதன், மொழி காரணமாக நிதி மறுக்கப்பட்டதாக கனிமொழி ஒரு ஆதாரத்தையாவது காட்ட முடியுமா என கேள்வி எழுப்பினார்.


திமுக ஆட்சியின் கல்வித் துறையிலான தோல்விகளை மறைக்கவே, தேசிய கல்விக் கொள்கையை தவறாக சித்தரித்து பயத்தை உருவாக்கும் அரசியல் நாடகத்தில் கனிமொழி ஈடுபட்டு வருவதாகவும், உண்மைகளை மறைத்து பேசும் அரசியலுக்கு மக்கள் உரிய பதில் அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.